Sunday, November 16, 2008

கருப்பு மண்ணில் கலந்த நிறங்கள் - பாகம் - 2

உலக உருண்டையை உருட்டி விட்டு ஆப்பிரிகா கண்டத்தை உற்றுப் பாருங்கள் என்று சொன்னேன், அதற்காக இப்படியா முறைத்துப் பார்ப்பது, கண்ணை எடுங்கள். அந்த அழகிய கண்டத்தின் மீது உங்கள் கண்ணே பட்டு விடும் போல் உள்ளது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த கண்டத்தின் அழகில் மயங்கி நிற்பதற்கு முன் சற்றே சுற்றியுள்ள பகுதிகளையும் சுற்றிப்பாருங்கள்.

வடக்கே மத்திய தரைக் கடல் என்று ஒரு கடலை பார்த்திருப்பீர்கள். இந்தக் கடல் எதோ ஒரு சாதாரண கடல் என்று நினைத்து விடாதீர்கள். பார்ப்பதற்கு ஒரு சாதுவான பிள்ளையை போல் தெரிந்தாலும் அநேக சரித்திர நிகழ்வுகளுக்கு தன் ஆர்ப்பரிக்கும் அலைகளால் சாட்சி சொல்லும் ஒரு நீர்க்குவியல். அநேக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் இதன் பெயர் தவறாமல் தவழ்ந்து வரும்.


கிறிஸ்தவர்களின் வேத நூலான "பரிசுத்த வேதாகமத்தில்" சொல்லப்படும் "நோவாவின் பேழை" க்குப்பிறகு மனிதன் சகல சௌகர்யங்களுடன் நீர்மேல் பயணிக்க பயணியர் கப்பல் என்ற ஒன்று புறப்பட்டிருக்குமானால் அது இந்தக் கடலின் மீது தான் வெள்ளோட்டம் விடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடலின் மேற்கு முனையில் ஜிப்ரால்டர் ஜலசந்தி என்று ஒரு ஜலசந்தியை பார்த்திருபீர்கள்.

அநேக ஐரோப்பிய நாடுகளின் தெற்குக் கரைப் பகுதியை அடைய இந்த ஜலசந்தியை கடந்துதான் எந்தவொரு கப்பலும் செல்லவேண்டும். அப்படியே சற்று கிழக்கே வாருங்கள். அழகான சைப்ரஸ் தீவுகள் கண்களில் பட்டிருக்குமே, அந்த பசுமை மாறா நினைவுகளோடு அப்படியே தென் கிழக்கு கரையோரம் பாருங்கள்.

ஆப்பிரிக்காவின் பழமை வாய்ந்ததும், சிற்பக் கலை, கட்டிடக் கலை என எல்லாக்கலைகளுக்கும் பெயர் பெற்றதும்,செல்வச் செழிப்பும் மிகுந்த எகிப்து என்னும் நாட்டின் வடகிழக்கு மூலையில் மூக்கு போன்ற ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்குமே அதுதான் சீனாய் வனப்பகுதி. இந்த சீனாய் வனப்பகுதியையும் எகிப்து நாட்டையும் பிரித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கால்வாய் ஓடுகிறதே பார்த்தீர்களா அதற்குப் பெயர் தான் "சூயஸ் கால்வாய்".

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் மாற்றங்களில் பெரும் பங்கு வகித்தது இந்த கால்வாய் தான். தென் ஆப்பிரிக்க கதையை சொல்கிறேன் என்று புறப்பட்டு, இது என்ன ஆப்பிரிக்கா கண்டத்தை இந்த பொன்னையன் சுற்றுகிறானே என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. சற்றே முகத்தை நேராக்கி விட்டு நான் சொல்வதை கேளுங்கள். இந்த சூயஸ் கால்வாய்க்கும் ஆப்பிரிக்கா கண்டத்தின் தலைவிதி திருத்தி எழுதப் பட்டதற்கும் நேரடி தொடர்பு உள்ளது.

சரி, இந்த கால்வாயின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா? மத்திய தரைகடலிலுள்ள போர்ட் சயீத் என்னும் துறைமுகத்தையும், செங்கடலில் உள்ள சூயஸ் துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு நீர்வழிப்பாதைதான் இந்த கால்வாய். ஒரு புறம் இருந்து மறுபுறம் வரை 163 கிலோமீட்டர் நீளத்திலும் 300 மீட்டர் அகலத்திலும் ஓடுவது என்னவோ வெரும் நீர் தான் என்றாலும், அது இணைப்பது எதை என பாருங்கள்.

எப்பொழுதும் எந்த வீட்டில் புகுந்து, எதை பிடுங்கிப் போகலாம் என வேவு பார்த்துத் திரியும் ஐரோப்பிய ஓநாய்களின் கடல் பகுதிகளையும், வியர்வை சிந்தி விதை விதைத்து, நாற்று நட்டு, களை எடுத்து, விளைந்து சிரிக்கும் பயிர்களோடு தினமும் பல கதைகள் பேசி, ஆதவன் மறைந்ததும் அயர்ந்து உறங்கச் சென்ற அப்பாவி மக்களின் நாடுகளையும் இணைக்கிறது.

கிழக்கு நாடுகளுக்கு ஒரு நீர்வழி காணவேண்டும் அதுவும் அகன்று விரிந்துள்ள ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றாமல் குறுக்கு வழியில் செல்ல ஒரு நீர்வழிப் பாதை இருந்தால் நன்றாயிருக்குமே என இந்த ஐரோப்பிய ஓநாய்கள் வெகு காலமாக யோசித்து வந்தார்கள். இந்த யோசனை தோன்ற மூல காரணமே ஆசியாக் கண்டத்தில் நாகரிகச் செருக்குடன், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரங்களாய் விளங்கிய இந்தியாவும் சீனாவும் தான்.

இந்த இரண்டு மண்ணையும் எப்படியாவது மிதித்தே விடுவது என கங்கணம் கட்டிக் கொண்ட ஐரோப்பிய வியாபாரிகள் ஏராளம். இந்த இரண்டு நாடுகளின் பெருமைகளும், காபூல் நகரத்து சந்தைகளில் மிகவும் பேசப்பட்டன. அதற்கு கட்டியம் கூறும் வண்ணம் அந்த சந்தைகளில் விற்கப்பட்ட இந்திய பட்டாடைகள், காஷ்மீர கம்பளங்கள், வாசனை திரவியங்கள், உணவில் சுவை சேர்க்க மணம் கமளும் மசாலா பொருள்கள், தந்தத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், சீனத்து மூலிகைகள் என எல்லாக்கடைகளிலும் கோலோச்சும் இந்த நாட்டுப் பொருள்களின் ஆளுமை கண்டு ஐரோப்பியர்கள் மூக்கின் மீது விரலை வைக்க ஆரம்பித்து, கடைசியில் முழு கையையும் வைக்க வேண்டியதாகி விட்டது.

ஆனால் இந்த பொருள்களோடு வந்த கதைகள் அவர்களை திகைக்க வைத்தது. இந்திய மண்ணில் காலடி வைக்க தரை மார்க்கமாக கடக்க வேண்டிய தூரம் அவர்களை மலைக்க வைத்தது. தரை வழிப் பயணத்திற்கே உரிய சிரமங்கள் அந்த நாட்களில் மிகவும் கொடியதாய் இருந்தது. ஏதோ ஒரு ரயிலையோ அல்லது பேருந்தையோ பிடித்து அதற்கு பயணச் சீட்டுத் தொகை கட்டி, பண்பலை வானொலியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே பயணதூரத்தை கடப்பது போன்ற சிரமமில்லாத சமாச்சாரம் அல்ல என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

வழிப்பயணத்திற்கு தனக்கு மாத்திரம் உணவல்ல, தனது வாகனமான கால்நடைகளுக்கும் உணவு எடுத்துச் செல்லவேண்டும். வழியில் வரவேற்றுக் காத்திருக்கும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க குறைந்த பட்ச தற்காப்பு ஆயுதங்களாவது தேவை. கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்டு மன்னனுக்கும் அடிபணிந்து கப்பம் கட்டவேண்டும்.

சுமந்து செல்ல முடிந்த அளவுக்கே சரக்கு எடுத்துச் செல்லமுடியும். இதற்கும் மேல் இயற்கையின் சீற்றங்கள், மலைவழிப் பாதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி, போதும். அவர்களோடு பயணித்தது போதும். இந்த சிரமங்களை தவிர்க்கத்தான் மனிதன் நீர்வழிப் பாதையில் கவனம் செலுத்தினான். எகிப்திய அரச பரம்பரையில் 12வது பரம்பரை வரும் வரை யாரும் இப்படிப்பட்ட நீர்வழித்தடங்களை பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

வந்த அரசர்கள் எல்லாரும் ஆட்சி செய்தார்களோ இல்லையோ, சிலை வடிப்பதிலும், சிற்பங்கள் செய்வதிலும், வயிற்றைக் குலுக்கி நடனமாடும் அந்தப்புர அரை குறை ஆடை அழகிகளை ரசிப்பதிலும் தான் அதிக நேரம் செலவு செய்தார்களே தவிர, நாட்டின் வளம் பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. 12வது அரச பரம்பரையில் வந்த பார்வோனாகிய மூன்றாவது ஸெனுஸ்ரேத் என்ற மன்னனுக்குத்தான் ஒரு கால்வாய் வெட்டினால் என்ன என்ற யோசனை ஒரு சுபயோக சுபதினத்தில் உதித்தது. அதுவும் இப்போது நாம் பார்க்கும் சூயஸ் கால்வாய் அல்ல.

அவர் வெட்டியது என்னவோ செங்கடலையும் நைல் நதியையும் இணைக்கும் ஒரு சிறிய கோடு தான். இவர் போட்ட இந்த சிறிய கோடு எகிப்து நாட்டின் வணிகத்தை சிறிதே பெருக்கினாலும், மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் ஓரளவுக்கு இணைக்கத்தான் செய்தது. இவரது ஆட்சிக்காலம் கி.மு.1878 லிருந்து 1839 வரைதான். அதற்குப்பிறகு வந்த அரசர்கள் எல்லாம் இந்த கால்வாயை பற்றி சிந்தித்தர்களோ இல்லையோ தெரியவில்லை.

ஆனால் இந்த நீர்வழித்தடம் கிறிஸ்துவுக்கு முந்தைய 13 ம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. அதாவது எகிப்தின் பிரசித்த பெற்ற மன்னரான இரண்டாம் ராமஸேஸ் வரையிலும் இந்த கால்வாய் இருந்திருக்கிறது. அதற்குப்பின் பலமுறை மூடப்பட்டும், பின் தூர்வாரப்பட்டும், பிறகு மூடப்பட்டுமென ஒரு கண்ணாமூச்சி விளையாட்டைத்தான் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் எல்லாம் ஆடி இருக்கிறார்கள்.

ஹெரொதோடஸ் என்கிற கிரேக்க வரலாற்று எழுத்தாளர் எழுதுகையில் கி.மு.600 ல் எகிப்தை ஆண்ட இரண்டாம் நேகோ மன்னன், இந்தக் கால்வாயை நிர்மாணித்துவிட்டுத்தான் ம்றுவேலை என்று கிளம்பியவன், ஒரு இலட்சத்து இருபதாயிரம் வேலையாட்களை கொன்றது தான் மிச்சம், கால்வாய் நிர்மாணப்பணி அப்படியே இருந்தது என்று கூறுகிறார். கடைசியாக இந்த கால்வாய் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து மங்களம் பாடியவர் பெர்ஸியாவின் முதலாம் தரியஸ் மன்னன் தான்.

இவர் இதை முடித்துவிட்டு இந்த கால்வாயின் அழகை, இதன் நீள அகலத்தை அணு அணுவாக ரசித்திருக்க வேண்டும். இதன் மூலம் பெருகும் வருவாய் மற்றும் வாணிப நலன்களை பற்றி ஒரு கனவுக்கோட்டையே கட்டியிருக்க வேண்டும். சும்மா சொல்லக்கூடாது, இவர் ஒரு "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்" ரகம் போலும். பெர்சியாவிலிருந்து எகிப்துக்கு வந்து அதை போரிட்டுப்பிடித்து, தன் வசப்படுத்தி, அதில் உள்ள செழிப்புகளை கண்டு, கால்வாயை வெட்டி, இப்படி இப்படி எழுதிக்கொண்டே போய் முற்றுப்புள்ளி வைப் பதற்குள் மூச்சு முட்டுகிறது.

இவருக்கு கல்வெட்டுகளில் அதிக விருப்பம் போலும். தான் நிர்மாணித்த கால்வாய் கரையோரமும், மற்றும் நைல் நதிக்கரையோரமும் ஒரு கல்வெட்டை நாட்ட உத்தரவிட்டார். " நான் ஒரு பெர்சிய மன்னன், பெர்சியாவிலிருந்து புறப்பட்டு வந்து எகிப்தை வென்றேன். நைல் நதியிலிருந்து பெர்சியக் கடல் வரையிலான இந்தக் கால்வாயை நிர்மாணிக்க நான் ஆணையிட்டேன். கால்வாய் நிர்மாணிக்கப்பட்டதும் , நான் நினைத்தபடியே எகிப்திலிருந்து பெர்சியாவுக்கு கப்பல்கள் சென்றன" என்று எழுதி வைத்தார்.

இவர் காலத்துக்குப்பிறகு இந்தக் கால்வாயை பலர் மூடினார்கள், பின்பு திறந்தார்கள், பிறகு தூர் வாரினார்கள் என எழுதிக்கொண்டு போகலாமே தவிர அங்கு என்ன நடந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் இதற்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்திய பெருமை திருவாளர் அப்பாஸித் காலிஃப் அல் - மன்சூருக்குத்தான் சேரும். பாக்தாத்தை தலைநகராகக் கொண்டு ஒரு பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து ஆண்டு கொண்டிருந்த இவர் இந்தக் கால்வாயை எதற்காக மூடினார் என தெரியவில்லை.

ஒரு வேளை அங்கும் இங்குமாகத் தெரிந்த கல்வெட்டுகள் அவரை வெறுப்பேற்றியதோ என்னவோ தெரியவில்லை, இந்த கால்வாய் இருந்த சுவடு கூட தெரியாமல் மூடிவிட்டார். இப்படியாய் எகிப்தில் இருந்த முதல் நீர்வழிப் பாதை மூடப்பட்டு எந்த வம்பு தும்புகள் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுதும் நன்றாக ஞாபகம் வைதுக்கொள்ளுங்கள், இன்னும் நாம் சூயஸ் கால்வாய் பக்கமே போகவில்லை.

ஆனால் நாம் போவதற்கு முன்னால் அங்கு வந்து சேர்ந்து விட்டார் நமது நெப்போலியன் அண்ணாச்சி. எங்கு கால் பதிக்கலாம், எப்படி கால் பதிக்கலாம் என மோப்பம் பிடித்து அலைந்தவருக்கு திடீரென்று மத்திய தரைக் கடலும், செங்கடலும் ஒரு சேரக் கண்ணில் பட்டு தொலைத்தது.

அவ்வளவுதான், தனது அனைத்து துர, ரத, கஜ, பதாதிகளுக்கும் ஆணையிட்டுவிட்டார். "வெட்டுங்கள் இங்கு கால்வாயை, மத்திய தரை கடலும் செங்கடலும் இணைய வேண்டும். அதில் நான் பயணித்து கிழக்கு நாடுகளுக்கு செல்லவேண்டும், அந்த நாடுகளின் செல்வங்கள் எனக்கு வேண்டும்" என்று மனிதன் கர்ஜிக்காத குறையாய் ஆணையிட்டார். அரசனின் ஆணைக்கு மறுப்பேது, உடனே கிளம்பினார்கள் வல்லுநர்கள் கால்வாய்க்கு வரைபடம் உருவாக்க. கி.பி.18 ம் நூற்றாண்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆராய்ச்சி செய்தவர்கள் ஒரு தவறான அறிக்கையை நெப்போலியனுக்கு கொடுத்தார்கள். அதாவது, செங்கடலானது மத்திய தரைக் கடலை விட 10 மீட்டர் உயரம் அதிகம் உள்ளது, இதில் கால்வாய் வெட்டினால் செங்கடலின் நீரானது வேகமாய் மத்திய தரைக்கடலை நோக்கி வரும். அதில் பயணித்து நாம் செங்கடலுக்கு போக வாழ்நாள் முழுக்க எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும் என ஏகத்துக்கும் பயமுறுத்தி, இங்கு கால்வாயே வேண்டாம் மன்னா என்று சொன்னார்கள்.

வல்லுநர்களின் பேச்சை மீற நெப்போலியன் என்ன ஒரு 23 - ம் புலிகேசியா? உடனே எல்லா கடல்களையும் பார்த்துவிட்டு, வல்லுநர்களைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு அடுத்த போருக்கு போய் விட்டார். ஆனால் வல்லுநர்களின் ஆய்வு எப்படி தவறாகப் போனது என்பதற்கு நிறைய அனுமானங்கள் உண்டு.

கேட்டாலும் நெப்போலியனின் போர்த்தினவுதான் இதற்கு காரணம் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஆராய்ச்சியாளர் அளவு கோல் எடுத்து எதையாவது ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், போர் முனையில் வாள் பிடிக்க அல்லது துப்பாக்கி பிடிக்க ஒரு ஆள் குறைவுபட்டதென்றால் உடனே நெப்போலியன் ஆராய்ச்சியை அப்புறம் பார்க்கலாம், முதலில் போர் முனைக்கு வந்து சேரு என்று செய்தி அனுப்பிவிடுவார்.

உடனே அந்த ஆராய்ச்சியாளர் அளவு கோலை அங்கேயே வைத்து விட்டு வாள் பிடிக்க போய் விடுவார். சண்டை எல்லாம் முடிந்த பின், அவர் இன்னமும் உயிர் பிழைத்திருந்தால், திரும்பி வந்து ஆராய்ச்சியை தொடரலாம். இல்லையேல் ஒரு புதியவர் வந்து ஆராய்வார். அவர் பழைய புண்ணியவான் விட்ட இடத்திலிருந்து தொடங்க வெகுவாய் முட்டி மோதி ஒரு நூல் முனையை பிடித்து, அப்பாடா கிடைத்தது தொடக்கம் என்று சொல்லி ஆராய்ச்சியை தொடங்கப்போவதற்குள் மறுபடியும் போர் முரசை நெப்போலியன் கொட்டி விடுவார்.

இப்படி ஒரு தொடர்ச்சி இல்லாத ஆராய்ச்சிகளினாலும், அந்த ஆராய்ச்சி முடிவுகளை சரியாக தொகுத்து அதற்கு வடிவம் ஏதும் தரப்படாததினாலும், தவறான தகவல்களே நெப்போலியனுக்கு போய் சேர்ந்தது. நல்லவேளை, நெப்போலியன் இந்த கால்வாயை கட்டத்தொடங்கவில்லை. அவர் மட்டும் கட்டியிருந்தால், அவரது முதல் இலக்கு இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் விதி அதோடு விட்டதா, இல்லை, இல்லை.

1854 மற்றும் 1856 களில் பெர்டினான்ட் டி லெஸ்ஸப்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டு தூதுவர் இந்த கால்வாய் பணிகளை துவக்கினார். இவர் தான் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்க வேண்டுமென ஒரு அர்த்தமுள்ள திட்டத்தோடு முன் வந்தவர். 1854 ம் வருடம் அக்டோப்ர் 30 ம் தேதி எகிப்திய மன்னரான சையத் பாஷாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1859 - ம் வருடம் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் கட்டப் பணிகள் ஆரம்பித்து, பத்து வருடங்கள் தொடர்ந்து 1869 ம் வருடம் நவம்பர் மாதம் 27 ம் தேதி அன்றைய எகிப்திய பேரரசரான இஸ்மாயில் பாஷாவினால் கப்பல் போக்குவரத்துக்கென திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் கால்வாய் ஆப்பிரிக்க மக்களின் வாழ்விலும் சரி, கிழக்கு நாடுகளின் வளங்களோடும் சரி, விளையாடிய விளையாட்டு இருக்கிறதே அதை பிரிதொரு முறை சொல்கிறேன். இப்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வோம்.

தொடரும்.

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மிகவும் அழகான ஒரு படைப்பு.தெளிவான நடை.
jeevaflora