Showing posts with label கிருஸ்துவம். Show all posts
Showing posts with label கிருஸ்துவம். Show all posts

Tuesday, November 18, 2008

இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம் !!!

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" #1.

இயேசு கிறிஸ்துஇயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் முக்கியமானதாக கருதப்படும் கட்டளை இது. தன்னைத்தானே கிறிஸ்தவம் என்னும் மதத்தில் இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும், தன் வாழ் நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த கட்டளையை குறித்து சிறிதளவேனும் கண்டிப்பாக சிந்தித்திருப்பான். இனி இந்த கட்டளை கொடுக்கப்பட்ட கால கட்டத்தையும், யாருக்காக கொடுக்கப்பட்டது என்பதையும் சற்றே பார்ப்போம்.இந்தக் கட்டளை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்த்துவின் சீஷனாகும் தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரமே இந்த கட்டளை கொடுக்கப்பட்டது. தகுதிகள் என்னென்ன :

அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி " ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன்" # 2


சீஷனாக இருக்கவிரும்புகிறவன் தனக்குண்டான யாவற்றையும் விட்டு, சுயநலம் துறந்து, பிறர் நலம் விழையும் ஒருவனாக மாறினால் மாத்திரமே அவன் இயேசுவின் சீஷனாக முடியும். அப்படிப்பட்ட சீஷன் மாத்திரமே மற்ற மனிதனுக்கு நல்வழி காட்ட முடியும்.


இனி சீஷர்கள் உருவான விதத்தைப் பார்ப்போம். கிறிஸ்து மண்ணில் வாழ்ந்த நாட்களிலும் சரி, அவரது நாட்களுக்குப் பிறகும் சரி, அவரால் போதிக்கப்பட்ட இறையியல் தத்துவம் என்பது வெகுவாக மக்களால் வரவேற்கப்பட்டது. வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமெனில் கிறிஸ்த்துவின் போதனைகளை ஏற்க மறுத்த யூத குலமே, பின்னாட்களில் அவரது போதனைகளில் பொதிந்து கிடக்கும் இறையியல் உண்மைகளையும், அன்பின் ஆழத்தையும் கண்டு வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். வெறும் எபிரேய மண்ணில் (இன்றைய மத்திய கிழக்கு நாடுகள்) மாத்திரமே வெகுவாக பிரசங்கிக்கப்பட்டு வந்த இந்த தத்துவம், ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்தவுடன் புது பரிமாணத்தைக் கண்டது. கான்ஸ்டன்டைன் என்னும் மன்னன் மாத்திரம் இந்த எளிய வாழ்வியல் நெறியால் கவரப்பட்டு, தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்திருப்பானெனில், இந்த தத்துவங்கள் வெறும் தத்துவங்களாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு மன்னன் தன் இறையியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பிறகு அதை மக்களிடத்தில் சொல்லாமலிருந்தால் அவன் மக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடுவான். இன்றைய நாட்களைப் போல் மதச் சாற்பற்ற நிலையிலெல்லாம் மன்னன் அந்த நாட்களில் இருந்து விட முடியாது. மன்னன் ஒரு முன் மாதிரியாய் வாழ வேண்டிய கட்டாயம் அந்த நாட்களில் இருந்தது. ஆகவே மன்னன் இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவிக்கப் போக, இந்த கிறிஸ்துவின் போதனை என்னும் ஒரு வாழ்வியல் தத்துவம், மதமாக பரிமாணமெடுத்து வேறு திசையில் பிரயாணிக்க ஆரம்பித்து விட்டது. மன்னன் அறிவிக்கும் வரை வாழ்வை நல்வழிப்படுத்தும் நெறிகள் நிறைந்த இப்போதனைகள், அரசனின் அறிவிப்புக்குப் பின் மதச்சாயம் பூசிக்கொண்டு மதம் பிடித்து அலைய ஆரம்பித்தது. இந்த வாழ்வியல் தத்துவங்கள் என்று மதம் எனும் மார்க்கத்தில் பயணம் செய்ய ஆரம்பித்ததோ அன்றே அதனுடன் பூசல் கொண்ட சடங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு சேர ஆரம்பித்தன. பாவ மன்னிப்பென்ற சடங்கு, பின்னர் ஞானஸ்நானம், புது நன்மை போன்ற சடங்குகள் நிறைந்து இது கத்தோலிக்க மதமாய் வலுவாய் கால்களை ஊன்ற அதிக நாட்கள் பிடிக்கவில்லை. அரசியல் ஆதரவும் கூட இருந்ததால், இந்த மத நம்பிக்கை மற்றவர்களின் இறைஉணர்வை வலுக்கட்டாயமாக ஆட்கொள்வதென்பது வெகு சுலபமாய் போய் விட்டது. மனிதனுக்குள் எப்பொழுதும் தானாகவே ஊற்றெடுத்துக்கிடக்கும் இறைத்தேடலுக்கு விடை தருவது போன்ற வெளித்தோற்றத்தை , காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட இந்த மத நம்பிக்கைகள் வெகுவாய் தர ஆரம்பித்தன.இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த இந்த கிறிஸ்த்தவ மதம், இந்தியாவிற்குள்ளும் வந்து சேர்ந்தது.


இது இந்தியாவிற்குள் வந்த கால கட்டத்தைக் குறித்த தெளிவான அறிவு எனக்கு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான "தோமா" முதலாம் நூற்றாண்டிலேயே வந்து கிறிஸ்துவின் போதனைகளை அறிவித்தார் என்றும், கேரள பிராமிணர்களின் முன் அற்புதங்கள் செய்து காட்டினார் என்றும், சென்னை பரங்கி மலையில் இருந்தார் என்றும் ஒரு சாரார் வரலாறு எழுத, இவை அனைத்தும் பொய் எனவும், தோமா பரங்கி மலைக்கு வரவேயில்லை, இவை அனைத்தும் கட்டுக்கதை என ஒரு சாரார் அதை மறுத்தும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். இதன் உண்மை நிலையை குறித்த ஆராய்ச்சி நமக்கு அவசியமில்லை. ஆனால் 18ம் நூற்றாண்டில் தமிழக கடற்கரையோர கிராமங்களில் அவ்வப்பொழுது, போர்ச்சுக்கீசிய வணிக கப்பல்கள் வந்து போவதும், அதில் பயணித்த பயணிகள் மூலமாகவும் இந்த கிறிஸ்த்தவ மதம் என்பது பரப்பப் பட்டது என்பதற்கு கடற்கரையோர இன்றைய கிறிஸ்த்தவ கிராமங்களே சாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் வெகு சீக்கிரமாக பரவிய வாழ்வியல் மாற்றம் பல மனிதர்களின் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதுமாக ஒரு கலந்த விழைவுகளை ஏற்படுத்தியது. பல மன்னராட்ச்சிகள் கவிழ்ந்தன, அரசுகள் தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டன, ஒரு புறம் முதலாளித்துவம் என்பது மேலோங்க ஆரம்பித்தாலும், அதற்கு எதிர்வினைகளாக புரட்சிகளும் வெடித்தன. நிம்மதி என்பது அரிதாகக் கிடைக்கும் ஒரு உணர்வாய் மாறிவிட்டதால் மக்களிடம் இறை நம்பிக்கை வளர ஆரம்பித்தவுடன், அந்த நம்பிக்கையை சரியாய் திசை திருப்பி தனக்கு ஆதாயம் தேடிக்கொள்வதில் "மதம்" ஒரு பெரிய வெற்றியை அடைந்தது. அதன் மூலம் மதப் பிரச்சாரம் என்பது மதத்தின் ஒரு நீங்கா அங்கமாகி இருந்ததது. அப்படி பிரச்சாரம் செய்ய வந்தவர் தான் "பர்த்தலமெயு சீகன்பால்க்" எனும் டென்மார்க் தேசத்துக்காரர்.

1709 - ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 -ம் தேதி இவர் வந்து தமிழகத்தின் தரங்கம்பாடியில் கரை இறங்கினார். வரலாற்றுப் பக்கங்களில் காணக் கிடைக்கும் முதல் கிறிஸ்த்தவ மதப்பிரச்சாரகர் இவர் தான். ஆனால் இவர் வந்த காலத்தில், இந்தியாவில் இருந்த இறை நம்பிக்கைகள் இவருக்கு ஒரு சவாலாக இருந்த பொழுதிலும், வருணாசிரம கொள்கை, மனுதர்ம கொள்கை இன்னும் என்னென்ன கண்ராவிக் கொள்கைகளோ, இந்தக் கொள்கைகளினால், சமுதாயத்தில் நச்சுப்போல் பரவியிருந்த சாதிக்கொடுமை, இவரது மதப்பிரச்சாரப் பணியை சுலபமாக்கியது. மனிதனுக்கு அன்றும் சரி, இன்றும் சரி, சமூக அந்தஸ்த்து என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது. அந்த அந்தஸ்து எதன் மூலமாய் கிடைக்கிறதோ, அதை சார்ந்தே அவன் வாழ்கிறான். தமிழகத்தில் மனிதனுக்கு அந்த நாட்களில் ( ஏன் இந்த நாட்களிலும் கூடத்தான்) காணப்பட்ட சாதிக்கொடுமைகளில் இருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நிற்க இந்த புதிய மதங்களின் வரவு மிகவும் வசதியாய் போய் விட்டது. ஆனால் இந்த மதப்பிரச்சாரகர்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இந்த இந்திய பூமியில் காத்திருந்தது. அதாவது, சமூகத்தில் நிலவி வந்த (வருகின்ற)சாதிக்கொடுமையினால் மனிதனுக்குள் ஏற்றத் தாழ்வுகள் அவனது பிறப்பிலேயே புகுத்தப்படுவது மாத்திரமல்ல, அவனது அடிப்படை உரிமைகள் கூட சாதியின் பெயரால் மறுக்கப்படுவது இன்றும் ஒரு அருவருப்பான நிகழ்வும், உண்மையும் தான். இந்த கசப்பான உண்மையை கண்டு ஆச்சர்யமும் வேதனையும் அடைந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் அடிப்படை உரிமைக்கான உத்திரவாதத்தை முதலில் தோற்றுவித்தனர். பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட்டன, மருத்துவ மனைகள் கட்டப்பட்டன. இவற்றுக்கெல்லாம் இறைவனின் பெயரால் வாரி வழங்க ஐரோப்பியர்கள் தயாராய் இருந்தனர். அப்படி நிறுவப்பட்ட அநேக ஸ்தாபனங்கள் தான் இன்று வாரி வழங்கும் அட்சய பாத்திரங்களாய் சிலருக்கு உபயோகப்படுகின்றன. இப்படி நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்ட சபைகளும், ஸ்தாபனங்களும் ஆரம்ப நாட்களில் என்னவோ ஒழுங்காய் செயல் பட்டது போல் தோன்றினாலும், பின்னாட்களில் சாதிக்கொடுமை என்னும் சமூக அவலம் சபைகளையும் விட்டு வைக்கவில்லை. #3

இப்படிப்பட்ட சபைகளில் இருந்து தோன்றிய ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அட்டூழியக்காரர்கள் மதத்தின் பெயரால் இன்றைய நாட்களில் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைப்பற்றித்தான் இந்த முழுப்பதிவும். இந்தியாவில் கிறிஸ்தவ மத தோற்றத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த சேவை உணர்வு அடியோடு ஒழிந்து போய், முதலீடில்லாமல் லாபம் ஈட்டும் ஒரு தொழிலாய் கிறிஸ்துவின் போதனைகள் திரிந்து இழிந்து நிற்கிறதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இந்தியர்களுக்குள் இருந்த இறைத்தேடல் வழிமுறைகளும், பரம்பொருளை குறித்த ஞானமும் உலகின் தலைசிறந்த கொள்கைகளாயும், ஞானமும் இருந்தவை. உருவில்லா ஜோதியை வழிபடும் வழிபாட்டு முறைகளை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆனால் இந்த வழிபாட்டு முறைகள் வெறும் சடங்கு சார்ந்தவைகள் மாத்திரமல்ல, உணர்வு சார்ந்தவைகளும் கூட. இந்தியர்களின் வாழ்வியல் நெறிகள், புழு பூச்சிக்கு கூட சிறிதும் தொல்லை தராதவைகள். முழுதும் சுய ஒழுக்கத்தை வலியுறுத்தும் போதனைகள் நிறைந்தவை. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் சுய ஒழுக்கம் வலுவாய் வலியுறுத்தி கூறப்பட்டாலும், பிறர் நலன் பேணுதல் என்பது முன்னிறுத்தப்பட்டது. இந்த பிறர் நலம் பேணும் பண்பு இந்தியாவில் கிறிஸ்தவ பிரச்சாரங்களில் எதிரொலித்தது மாத்திரமல்ல, செயல் வடிவத்திலும் வெகுவாய் காணப்பட்டது. அதன் விழைவுகள் தான் இந்த கல்விக் கூடங்களும், மருத்துவ சேவைகளும் மற்றும் பல சேவைகளுமாய் இருந்தது. ஆனால் வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரிய நிகழ்கால உண்மை என்பது இந்த பிறர் நலம் பேணல் முற்றிலுமாய் சுய நலம் பேணலாய் மாறி விட்டது. கல்விக்கூடங்கள் பணம் காய்க்கும் மரங்களாக மாற்றப்பட்டன. சபைகள் பணம் சேர்க்கும் கேந்திரங்களாக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவுக்கு நிறைய வேலைகள் கட்டளையிடப்பட்டன, இயேசு அழைக்கிறாரில் ஆரம்பித்தது, இப்பொழுது, விடுவிக்கிறார், குணமாக்குகிறார், சுகமாக்குகிறார், மனம்மாற்றுகிறார், துயர் துடைக்கிறார், அன்பு செலுத்துகிறார், பார்க்கிறார், கேட்கிறார், மன்னிக்கிறார், தூக்கி விடுகிறார் என்று இன்னும் இயேசு கிறிஸ்த்துவை என்னென்னமெல்லாமோ செய்யவைத்தார்கள், வைக்கிறார்கள். சென்ற முறை நான் பிறந்த மண்ணான கொங்கு நாட்டிற்கு சென்ற பொழுது ஒரு விளம்பர பலகை பார்த்தேன். "இயேசுவின் கண்ணீர் ஊழியங்கள்". அடப்படுபாவிகளா!! இயேசுகிறிஸ்து எப்பொழுதிருந்து அழுக ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. மக்களும் ஆட்டு மந்தைகளாய் சென்று இப்படியெல்லாம் செய்யும் இயேசுவை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி கவர்ச்சிகரமான ஊழியங்களினால் சமூகத்தில் மூன்று வகையான விழைவுகளை காண முடிகிறது.


ஒன்று : கிறிஸ்துவின் சீஷத்துவ குணம் சிறிதும் இல்லாத இந்த ஊழியக்காரர்களால் கிறிஸ்துவின் போதனைகள் முற்றிலும் மாற்றப்பட்டு கவர்ச்சிகரமான கருத்துகள் புகுத்தப்பட்டதால், உண்மைப் போதனைகளின் தொன்ம வடிவம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது. மக்களின் தேவைக்கேற்ப சுவிஷேஷம் வழங்க இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள்.இதன்மூலம் கிறிஸ்தவ போதனைகள் புறம் தள்ளப்பட்டு, கிறிஸ்துவின் பெயரால், எந்த இறை நம்பிக்கைக்கும் ஒவ்வாத அருவருக்கத்தக்க போதனைகளால் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.


இரண்டு : எங்கு திரளான மக்கள் கூடுகிறார்களோ, அங்கு பணப்புழக்கம் அதிகரிக்கப்படுகிறது. கணக்கில் சேராத பணம் திரண்டு வருவதால், பிரச்சனைகள் அதிகமாகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள்.
இவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள். பணப்பிரச்சினையில் சிக்கியிருக்கும் இவர்களால் எப்படி மற்றவர்களுக்கு "பண ஆசையை ஒழித்து விடுங்கள்" என்று போதிக்க முடியும். இவர்கள் என்ன தெருவில் அமர்ந்து யாகம் செய்யவா அமர்ந்திருக்கிறார்கள்????? வெட்ககேடாய் இருக்கிறது. இவர்களா இறைஞானம் போதிக்கப்போகிறார்கள்? இவர்களைப் பார்த்துத்தான் இயேசு கிறிஸ்து சொன்னாரோ " குருடன் குருடனுக்கு எப்படி வழி காட்ட முடியும்?"


மூன்று : இந்த துர்போதனைகளினால் நடைபெறும் மூளைச்சலவையில் ஒரு கூட்ட மக்கள், தங்களை அறியாமலே இதில் இழுக்கப்பட்டு, பின் இந்த சக்கர வியூகத்தில் இருந்து வெளி வர வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலையை காண முடிகிறது. கிறிஸ்தவர்கள் என்னும் முத்திரை இந்த கூட்டத்தாரின் மேல் குத்தப்படுவதால், நேற்றுவரை கலாச்சார செருக்குடன் வாழ்ந்துவந்த தங்களின் சமுதாயத்திலேயே இவர்கள் அந்நியமாகிப்போய் நிற்கிறார்கள். இப்படி அடையாளம் தொலைத்து செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த மந்தையைத் தான் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சுற்றிக் கொண்டிருக்கும் வன்முறை கும்பல்கள், மதம் மாற்றுகிறார்கள் என்ற பெயரில் சூறையாடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே மூளைச்சலவை செய்யும் கும்பல் எந்தப்பாதிப்பும் இல்லாமல் தங்கள் பணியை செவ்வனே செய்து வருகிறது. இதையெல்லாம் காணும் போது இறைவனிடத்தில் இப்படியாய் மன்றாடத் தோன்றுகிறது.

இயேசுவே இறங்கி வா சிலுவையிலிருந்து சீக்கிரம்!!
இந்த கெட்ட குமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
இவர்கள் உனக்கு சிலுவையில் கோவணம் கட்டிவிட்டு
தன்னுடலுக்கு பட்டாடை உடுத்துகிறார்கள்.
ஆணிகள் பாய்ந்த உன் கரத்தை காட்டி இவர்கள் உலகின்
ஆஸ்த்திகள் அனைத்தும் வாரிக்கொள்கிறார்கள்.
முள்முடி சூடிய உன் முகத்தைக் காட்டித்தான் இவர்கள் தன்
தலையை மூடும் கிரீடங்கள் சூடுகிறார்கள்.
உன்னைப் போல் பிறனை நேசி என்றாய், ஆனால் இவர்கள்
தன்னையும் உலகையும் மட்டுமே நேசிக்கிறார்கள்.
இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம்!!!
இந்த கெட்டகுமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
ஆதாரங்கள்:
#1 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 28, 19 மற்றும் 20 ம் வசனங்கள்.
#2 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 16 , 24 ம் வசனம்.

Sunday, November 16, 2008

பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும்!!!!

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் சங்கபரிவார இயக்கத்தை சேர்ந்த பெண் துறவிக்கு தொடர்பு உள்ளது. இந்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். - பத்திரிகை செய்தி.

மகாரஷ்டிர மாநிலத்தில் வெடி குண்டு தயார் செய்யும் பொழுது அது வெடித்து ஹிமான்ஷு பான்சே மற்றும் நரேஷ் ராஜ் ஆகிய இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். - பத்திரிகை செய்தி.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகரில் வெடி குண்டு தயார் செய்யும் பொழுது அது எதிர்பாராத விதமாக வெடித்ததால் ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபிந்தர் சிங் ஆகிய இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் உடல் சிதறி இறந்து போயினர். - பத்திரிகை செய்தி.


தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதன் பொருட்டு மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் மதக்கலவரம் ஏற்பட்டு, பெரும்பாலும் முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தென்காசியின் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தில் குமார் பாண்டியனின் கொலையில் எதிர்பார்த்த அளவுக்கு மதக்கலவரங்கள் நடக்க வில்லை. ஆகவே இன்னொரு பெரிய கலவரத்தை உண்டாக்கவே குண்டு வைத்தோம் என்று கூறினார்கள். - பத்திரிகை செய்தி

தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர். தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். - பத்திரிகை செய்தி.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டான். ஒரு முஸ்லிமாக தான் மாறியதற்கான அடையாளமாக அதை காண்பிக்க ஆசைப்பட்டான். முஸ்லிம்களை அவமானப்படுத்தி காந்தி கொலையை முஸ்லிம்கள் தான் செய்தனர் என்று காண்பிக்க, இது வேண்டுமென்றே இந்து இயக்கங்களால் நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சகோதரர்களே, மேற்சொன்ன செய்திகளெல்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?

தீவிரவாதம் எனும் நச்சு, நமது சமூகத்தை இன, மொழி, மத பாகுபாடின்றி எல்லோரையும் பாதித்திருக்கிறது.

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற இந்துக்களுக்கு தங்க இடம் மறுக்கப்பட்டு, காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியவுடன், ஊடகங்களில் ஒரு சாரார் அநியாயத்தைப் பாருங்கள், இந்திய நாட்டில் இந்துக்களுக்கே உரிமை மறுக்கப்படுகிறது, இதுதான் மதச் சார்பின்மையா? என குமுறித் தீர்த்தார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பிறகு, குஜராத்தில் நடந்தேறிய கலவரங்களைக் கண்டு இன்னொரு சாரார், சிறு பான்மையினர் நசுக்கப்படுகிறார்கள், அரசாங்கம் தன் அனைத்து இயந்திரங்களையும் பயன் படுத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என ஊடகங்களில் கூக்குரலிட்டார்கள்.

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டவுடனும், அந்த வன்முறைத் தீ நாட்டின் பல பாகங்களுக்கும் பரவி கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட பொழுதும் மதச் சார்பின்மைக்கு முழு விலாசம் சொல்லுவதாக பாசாங்கு செய்யும் ஒரு சாரார் அதை சர்வதேச ஊடகங்களின் கவனம் திரும்பும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இந்த கூக்குரலும், குமுறலும், பஞ்சாயத்தும், பேச்சு வார்த்தையும் அந்த எரியும் தணல் புகையும் வரை மட்டுமே. புகை அடங்கியவுடன், ஊடகங்கள் வழக்கம் போல யாருக்கு சிண்டு முடிந்து விட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் மூலம் தங்களது வர்த்தகத்தை எவ்வளவு பெருக்கலாம் என்ற கேவலமும் அருவருப்புமான கணக்குப் போடுவதிலேயே நேரம் செலவிடுகின்றனர்.

போலி மதச் சார்பின்மை வாதிகள் அடுத்த கலவரம் எப்பொழுது உண்டாகும், நாம் விவாதம் செய்து பேட்டி கொடுத்து, நாமும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி, பிரச்சனையின் வீரியத்தை எவ்வளவு திசை திருப்ப முடியுமோ, அவ்வளவு திசை திருப்பலாம் என காத்து காத்து தவம் கிடக்கிறார்கள்.

மத வாதிகளோ, அடுத்து எங்கிருந்து தொடங்கலாம் என யோசிக்க ஆரம்பித்து, அடுத்த பிரச்சனைக்கான தொடக்கம் கிடைப்பதற்கு அரும்பாடு படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், ஒரு கவர்ச்சி நடிகை நீதிமன்றத்துக்கு வரும் போது என்ன உடை அணியலாம் அல்லது அணியக் கூடாது என்பது கூட மதவாத கோட்பாடுகளால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயமாகிறது என்றால், மதம் எனும் பித்து நம்மை எவ்வளவாக பீடித்து இருக்கிறது என்று பாருங்கள்.

ஆனால் இருவர் மட்டுமே தங்களது கொள்கையில் பிடிவாதமாக மற்றும் நிலையாக முன்னறிச் செல்கிறார்கள்.

ஒருவர் திருவாளர் தீவிரவாதி, மற்றொருவர் திருவாளர் பொது ஜனம்.

தீவிரவாதி அடுத்த தாக்குதலுக்கு ஏற்ற இடம் எது என முதலில் வெடித்த குண்டுச் சத்தம் அடங்குவதற்கு முன்பே யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். நமது இல்லத்தரசிகள் சொல்வார்களே " இந்த தீபாவளிக்கு லட்டு சுடும் பொழுது, பூந்தி இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு கொஞ்சம் சின்ன கண்ணு வெச்ச அரிகரண்டி வாங்கி பூந்தி செஞ்சு பாக்கணும்" என்பது போல, "அடுத்த முறை குண்டு வைக்கும் பொழுது கொஞ்சம் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமா பாத்து வைக்கணும், பய புள்ளைக ஒரு முன்னூறு பேராவது சாவாங்கன்னு பாத்தா, வெறும் நூறு பேருதான் செத்திருக்காங்க, அடுத்த தரம் நம்ம பசங்க கிட்டச் சொல்லி கொஞ்சம் பவர் கூடுதலான குண்டா செய்யச் சொல்லணும்" என்பது போன்ற எதிர்காலத்திட்டத்தில் மூழ்கிப் போகின்றனர்.

திருவாளர் பொதுஜனமோ, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எங்க வீட்ல அடுப்பு எரிஞ்சுதா, எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டு சரியா திரும்பி வந்தாங்களா, சின்னத்திரை சீரியல ஒரு நாள் கூட விடாம பார்த்தாச்சா, சரி நாள் முடிஞ்சது, படுத்து தூங்கு. நாளைய பாட்டை நாளைக்கு காலைல பார்த்துக்கலாம் என்ற கடமையற்ற சுய நலத்துடன் அவரும் முன்னேறிச் செல்கிறார்.

நேற்று வரை பூக்கள் பூத்த இந்த நந்த வனங்களில் முட்களை விதைத்தது யார்?

நேற்று வரை தென்றல் வீசிய எங்கள் தெருக்களில் இன்று சூறாவளிகள் ஏன்?

அணைக்க மட்டுமே விரிந்த கரங்கள் இன்று அரிவாள் தூக்க துடிப்பது ஏன்?

ஏனைனில் நேற்று வரை எங்கள் நந்த வனங்களில் முட்களைக் கண்டவுடன் அதை இருவராய் இணைந்து வேரறுத்தோம். ஆனால் இன்று, அந்த முட்கள் என் பாதத்தை பதம் பார்க்காதவரை அது பூவனால் என்ன, முள்ளானால் என்னவென்று சுயநல கூட்டிற்குள் சுருங்கி விட்டோம். சமூகத்தை பீடிக்கும் நச்சுக்கள் என் இல்லத்து கதவை தட்டாதவரை எனக்கு அதனால் ஒரு தொல்லையுமில்லை என்று சுயநலத்தோடு முடிவெடுத்து விட்டோம். ஆனால், அன்பரே, சமூகம் என்பதே நாம் தானே. நம் சமூகத்தை தன் கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் தீவிரவாதத்திற்கு குண்டு வெடித்து கொலை செய்யும் ஒருமுகம்தான் உள்ளது என பொய்யாய் கற்பனை செய்யாதீர்கள். அதன் முகத்திற்கு சினிமா, சின்னத்திரை, சுயநலம், அரசியல், பணம், லஞ்சம், போலியான ஆன்மீகம் என பல முகங்கள் உண்டு. இத்தனை முகங்களில் ஏதாவது ஒன்றினை முகமூடியாய் அணிந்து கொண்டுதான் நானும் நீங்களும் போலியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அடாடாடா, ஒரு இந்து பெண்துறவி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார் என்றவுடன், இணைய ஊடகத்திலும் சரி, தொலைக்காட்சி ஊடகத்திலும் சரி, பதிவர் வட்டத்திலும் சரி எத்தனை கொக்கரிப்புகள், ஆகா, இதற்காகத்தானே காத்திருந்தேன் , வாருங்கள் துரியோதனர்களே, துச்சாதனர்களே, இன்று இந்த திரௌபதி உங்களை துகிலுரிக்க தருணம் வாய்த்தது என எத்தனை ஏளனங்கள், எத்தனை தீர்க்கதரிசனங்கள், எனக்கு இது எல்லாமும் முன்னாலேயே தெரியும் என்றும், இந்துத்துவாவின் கோர முகத்தைப் பாரீர் என்றும், யார் தீவிர வாதிகள் என்ற விவாதங்களும் அப்பப்பா, வாசிக்க வாசிக்க மூச்சு முட்டுகிறது.

சகோதரர்களே! ஒருவருக்கு நேராய் ஒருவர் விரல் நீட்டிவிட்டு ஒதுங்கி விடுவதால் இந்த தீவிரவாதம் எனும் துர்குணம் நம்மை விட்டு நீங்கி விடுவதில்லை. நான் மாற்றி நீ, நீ மாற்றி நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குற்றம் சுமத்துவதால், இந்த தீவிரவாதம் எனும் பீடை நம் சமூகத்தை விட்டு விலகிப் போய் விடுவதில்லை. முதலில் இதற்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்துங்கள். தீவிர வாதத்தில் அது என்ன இந்து தீவிர வாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதம்? எல்லா வாதங்களும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்பவையே. சுட்டிக்காட்ட நீட்டிய விரல்களை சுருக்கி மடக்குங்கள். எந்தக் கடலை கடைந்தெடுத்து இந்த விஷத்திற்கு மருந்திடுவோம் என சிந்திப்போம், அனுப்புங்கள் ஆயிரம் அனுமார்களை, இந்த வியாதிக்கான மூலிகை தளைப்பது ஆயிரம் மலைகளானாலும் அப்படியே பெயர்த்துவர ஆணையிடுங்கள்.

இந்த விஷத்தை நாமே தின்று தீர்ப்போம், நம் குழந்தைகளாவது வருங்காலத்தில் அமுதம் உண்ணட்டும். அவர்களுக்கு ஒரு மாதிரியை வைத்துப் போவோம்.


"பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும்"!!!!