Sunday, November 16, 2008

கறுப்பு மண்ணில் கலந்த நிறங்கள் - 1

நீர் மூடா நிலப்பரப்பில் சொர்க்கபூமியாய் உருக்கொண்டிருந்தும் நேயமற்ற மனிதர்களால் கண்டமாக உருவெடுத்து, அதில் துண்டமாக வெட்டப்பட்ட அற்புத பூமிப்பகுதி தான் ஆப்பிரிக்கா கண்டம். அதன் தென்கோடி முனையில் இந்திய பெருங்கடலாலும், வடமேற்கில் நமீபியாவாலும், வடக்கில் போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வேவாலும், வடகிழக்கில் மொஸம்பிக் மற்றும் ஸ்வாஸிலேண்ட் என்னும் நாடுகளாலும் சூழப்பட்டு கிடக்கும் தரைபகுதிதான் தென் ஆப்பிரிக்கா எனும் ஒரு வளம் கொழிக்கும் நாடு.

தன் பெயரிலேயே தன் கண்டத்தின் பெயரையும் கொண்டிருப்பதாலோ என்னவோ இங்கு ஒரு கண்டத்தின் அனைத்து வித்தியாசங்களையும் காண முடிகிறது.எனக்குத் தெரிந்தவரை தன் பெயரிலேயே தனது கண்டத்தின் பெயரையும்கொண்டநாடுகள்மிகச்சிலவே.ஆஸ்திரேலியா,அமெரிக்கா,இந்தோனேஷியா,தென் ஆப்பிரிக்கா போன்றவற்றை உதாரணமாக கொள்ளலாம். (தன் பெயரில் ஒரு பெருங்கடலையே கொண்டிருக்கும் நாடு உலகிலேயே இந்தியா மட்டும்தான் என்பது வேறு விஷயம்)இந்த இயற்கை வளம் கொழிக்கும் தென் ஆப்பிரிக்க நாட்டில் தான் அடியேன் பணியின் நிமித்தமாய் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

தென் ஆப்பிரிகா - மாசற்ற மனிதர்கள் வாழ்ந்த நாடு, இதயம் நிறைய மனித நேயம் நிறைந்து, எப்பொழுதும் சந்தோஷமாய், வளங்கள் நிறைந்து, வனங்கள் நிறைந்து, இயற்கையின் மடியில் புதியபூவாய் என்றும் மலர்ந்து நிமிர்ந்து நின்ற ஒரு நாடு. மனிதர்கள் எப்பொழுது இந்த மண்ணில் காலடி வைத்தார்கள் என்பதை குறித்த அனுமானங்கள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் வலம் வருகிறதே தவிர அடித்துச் சொல்ல ஆதராம் எதுவும் இல்லை.

மனிதன் கடலின்மீது மிதவைக்கலனாம் கப்பலை கண்டுபிடிக்கும் வரை, காற்றின் திசையை அறிந்து அதன் ரிஷிமூலம் காண புறப்படும் வரை, இந்த மண்ணிலும் நிம்மதி என்பது எட்டும் கனியாகத்தான் இருந்திருக்கிறது. வனங்களில் வாழும் மிருகங்களோடு மனிதனும் ஒரு சந்தோஷ பிராணியாகத்தான் நாட்களை கடத்தியிருக்கிறான்.பசித்தால் உண்ண அமுதச் சுவையுடன் பழங்கள், தாகம் தணிக்க தேனாய் ஓடும் ஆறு, கண்டு மகிழ இயற்கையின் வண்ணம், அயர்ந்து உறங்க திறந்த வனவெளி, வானம் பொழிந்தால் குடை பிடிக்க குகைகள், சூரியன் சுட்டால் நிழலால் போர்த்த படர்ந்துவிரிந்த பச்சைமரங்கள், தோள் தினவெடுத்தால் வீரம் காட்டி வேட்டையாட சாதுவான மிருகங்கள், காது குளிர கேட்டு மகிழ பண்பலை வானொலியாய் பறவை கானம் என வாழ்க்கை நிம்மதியாகத்தான் கழிந்தது.

பெண்களுக்கு பிரத்யேக வேலை எதுவும் இருக்கவில்லை. குழந்தை பெறுவதும், வளர்ப்பதும் மட்டுமே பெண்ணின் தொழிலாய் இருந்தது. அந்த நாட்களில் பெண்ணினம் அடிமைப் படுத்தபடவில்லை. நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என மேடைதோறும் முழங்கிவிட எந்த பெண் இயக்கங்களும் இல்லை.சாதிகள் இல்லை, எனவே சண்டைகள் இல்லை. மதங்கள் இல்லை, எனவே மனிதனுக்கு மதம் பிடிக்கவில்லை. ஆடைகள் இல்லை, எனவே ஆபாசம் இல்லை. அம்மணம் மறைக்க மனிதன் முயன்ற நாளிலிருந்துதான் ஆபாசமே தோன்றியிருக்க வேண்டும்.

பூசை செய்ய கடவுளர் இல்லை, எனவே பூசல் கொண்ட சடங்குகள் இல்லை. அண்டை வீட்டுக்காரன் இல்லை, எனவே அச்சம் என்பது மனதில் இல்லை.இன்றும் கூட எந்த இயற்கையின் சீற்றமும் இந்த மண்ணை உலுக்கிப் போட்டதில்லை. கடலில் தோன்றிய புயல்கள் எல்லாம் இந்த மண்ணின் கம்பீர அழகு கண்டு கரையோடு கரைந்து விட்டது.கரையை கடந்தது தென்றல் மட்டுமே. இந்த மண்ணை இதுவரை புயல் என்பது தொட்டுக் கூட பார்க்கவில்லை.

உலுக்கி எடுக்க புறப்பட்ட பூமித்தாயும், இந்த அழகை புரட்டிப்போட மனமில்லாமல் புதைந்து போய் விட்டாள். இந்த நாட்டை பூகம்பங்கள் அசைத்திருக்கலாமே தவிர அழித்துப் போடவில்லை.எங்கும் வளமை, எதிலும் இனிமை, பிறகு அடேய் பொன்னையா, எதனால் வறுமை எங்கே கொடுமை என நீங்கள் கேட்கலாம். இந்த பகுதிக்கு போகுமுன்னே பூகோள உருண்டை உங்கள் முன்னே இருக்குமே, அதை ஒரு முறை உருட்டிவிட்டு ஆப்பிரிக்கா கண்டத்தை ஒரு முறை உற்றுப் பாருங்கள்.

வேலை பளுவுக்கு மத்தியில் தமிழில் அதிகம் எழுத முடியவில்லை.

அடுத்த வாரம் சந்திப்போம்

No comments: