Sunday, November 16, 2008

உண்மையாலுமே உண்மை இதுதானா ?

அழகிய கிராமம், பச்சை மரங்கள், கோலம் போட்ட வாசல்கள், ஊரைத் தொட்டபடி ஓடும் ஆறு, அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில், சைக்கிளில் பால் கேன்கள் சுமக்கும் பால்காரன், தாவணி கட்டிய பெண்கள் (இந்த காலத்திலுமா!!!!!????), வயல் வெளிகள், திருவிழா கூட்டங்கள், மீசை வைத்த பெரிசுகள், அரச மரத்தடி பஞ்சாயத்துகள், கடுக்கன் தொங்கும் கிழவிகள், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னே நிற்கும் மீசை அரும்பா விடலைகள், கற்க கசடற என்று குறள் எழுதப்பட்ட பள்ளிக்கூட சுவர்கள், காவல் நிலையத்தின் முன் அவசரமாக சைக்கிளை நிறுத்திச் செல்லும் ஏட்டையா, இருக்கிற ஒரே வங்கிக் கிளைக்கு மடிப்புக் கலையாத சட்டையோடும் நெற்றியில் பூசிய திருநீருமாய் வந்து கம்பீரமாய் அமர்ந்து நோட்டெண்ணும் கேஷியர், கால் நடை மருத்துவமனைக்கு போகும் வழியில் ம்மாஆஆ என்று கத்திக்கொண்டு போகும் மாடுகள், மளிகைக்கடை வைத்திருக்கும் செட்டியார், டீக்கடையில் அமர்ந்து தினத்தந்தி படித்து நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் நியாய மூர்த்திகள், உழவு உழுக கலப்பை செய்த காலம் போய், டிராக்டர் ரிப்பேர் செய்யும் மெக்கானிக் உழவர்கள், தலைவர் நடித்த படங்களுக்கு கொடிகள் ஒட்டும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பரட்டைத்தலையும், வாயில் புகையும் சிகரெட்டும், தூக்கிக் கட்டிய லுங்கியுமாய் ஊருக்குள் ரகளை செய்யவே காத்திருக்கும் சண்டியர்கள் இப்படி ஒரு கிராமத்திற்கான அத்தனை முகவரிகளையும் காமிராவிற்குள் பிடித்தாகி விட்டது. இனி கதையை தேடுவோம் வாருங்கள்.

ஒரு சண்டியராகத் திரியும் இளைஞன், இவனுக்கு கண்டிப்பாக பரட்டை முடியும், சிகரெட் புகையும் வாயும், சாராய பாட்டிலின் மூடியை வாயால் கடித்துத் திறந்து அனாயசயமாக அதை துப்பி விட்டு அதை அப்படியே முழுதும் குடித்து முடிக்கும் குணமும் அவசியம் இருந்தாக வேண்டும். ரெட்டை சடை போட்ட தாவணி கட்டிய பள்ளி மாணவி, கண்டிப்பாக டவுன் பஸ்ஸிலோ அல்லது சைக்கிளிலோ பள்ளிக்கு செல்பவளாகத்தான் இருக்கவேண்டும். இவள் பள்ளிக்குப் போகும் வழியில் தான் அந்த தறுதலை கதாநாயகன் சிகரெட் குடித்துக்கொண்டோ அல்லது சாராயம் குடித்துக்கொண்டோ இருக்க வேண்டும். இவள் தினமும் பள்ளிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் இந்த பரட்டைத்தலை சண்டியரைப் பார்த்து கோபம் கொண்ட அல்லது மோகம் கொண்ட ஒரு பார்வையை வீசிய படி செல்லவேண்டும். நியதிப் படி கண்டிப்பாக இந்த பள்ளி மாணவி ஊர் பெரிய கவுண்டரின் மகளாகவோ அல்லது பணக்கார வீட்டுப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் அவள் வாத்தியார் மகளாகவோ அல்லது ஏட்டையா மகளாகவோ அல்லது ஒரு வங்கிக் கேஷியர் மகளாகவோ இருந்தால் கூட போதும். ஆனால் அரசியல் வாதி மகளாக இருந்து விட்டால் சாலப் பொருத்தம்.

என்ன!!!! வாசித்துக்கொண்டே போகிறீர்களே, இன்னும் புரியவில்லையா, கிராமிய மணம் கமழும் ஒரு எதார்த்தமான படம் எடுக்கப் போகிறேன். ஊர்த்திருவிழாவில் பெரிய கவுண்டரிடம் சண்டியர் குடி போதையில் டாவடிக்க, வெட்டுக்குத்து வரை போய் நிற்கும் இந்தத்திருவிழா ரகளையில் சண்டியர் கைதாக (முன்னே பார்த்தோமே, சைக்கிளை நிறுத்திவிட்டு போனாரே அதே ஏட்டையா தான் விலங்கு மாட்டுவது), பெரிய கவுண்டரின் ரத்த சொந்தமான ஒருத்தர், (தம்பியாக இருக்கலாம், அல்லது பங்காளியாய் இருக்கலாம்) பெரிய கவுண்டருடனான முன்விரோதத்தின் காரணமாக சண்டியரை ஜாமீனில் வெளியிலெடுத்து கவுண்டருக்கு எதிராக கொம்பு சீவி விட்டு, கவுண்டர் சின்னவீட்டோடு குலாவிக்கொண்டிருக்கும் பொழுது அவரை தீர்த்துக் கட்டிவிட ஐடியா கொடுக்க வேண்டும். அவரைக் கொல்லும் பொழுது ஒரே அடியில் கொல்லுவதோ அல்லது வெடிகுண்டு வைத்து கொல்லுவதோ கூடாது குறைந்தது இருபது முறையாவது அவரை வெட்ட வேண்டும், ஒவ்வொரு முறை வெட்டும் போதும் கவுண்டரின் உடம்பிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து சண்டியரின் பரட்டை முடி, முகம், கை, கால், அழுக்கு லுங்கி என ஒவ்வொரு இடத்திலும் தவணை முறையில் படவேண்டும். இந்தக்கொலையை ஒரு கால் நடக்கமுடியாமல் முடமான ஒரு சின்னப் பையன் பார்த்து விட்டு அதைப் போய் தாவணி அணிந்து கனவில் சண்டியருடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியிடம் சொல்ல, கதாநாயகி வந்து நாயகனுக்கு தன் சித்தப்பாவின் சூழ்ச்சியை அழுதுகொண்டே விளக்குவார். குறைந்தது ஒரு பதினைந்து நிமிடமாவது இந்தக்காட்சியில் கதாநாயகி அழுது கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். இந்த நேரத்தில் சண்டியருக்கு கை நரம்புகள் புடைக்கலாம், நெற்றியில் ஒரு சுருக்கம் வந்து போகலாம், குடித்துக் கொண்டிருந்த பீடியையோ அல்லது சிகரெட்டையோ தரையில் போட்டு காலால் மிதிக்கலாம், அல்லது சாராயம் குடித்துக் கொண்டிருப்பாரெனில் மிகவும் வசதியாய் போயிற்று, அந்த பாட்டிலை அப்படியே பாறை மீது வீசி எறிந்து உடைக்கலாம்.இதற்குப்பின் அவர் எப்படி பழிக்குப்பழி வாங்குகிறாரென்றும் எப்படி தாவணியை கை பிடிக்கிறாரென்றும் திரையில் பாருங்கள்.

இப்படித்தான் இன்றைய கிராமிய மணம் கமழும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆச்சர்யம் என்னவென்றால் அவை வெகு ஜன வரவேற்பைப் பெற்று வெற்றிப்படங்களென ஊடகங்களாலும் வர்ணிக்கப்படுகின்றன. இந்தப் படங்கள் நம் முன்னே கிராமங்களைப்பற்றி வைக்கும் பிம்பங்கள் என்ன?

கிராமங்கள் என்றாலே, அங்கு அழுக்கும் நாற்றமும், கோவணம் கட்டிய மனிதர்களும், மூக்கில் சளி ஒழுக நிற்கும் குழந்தைகளும், குடிகார கணவர்களும், வைப்பாட்டி வைத்திருக்கும் பண்ணையார்களும், சுரண்டிப் பிழைக்கும் கந்து வட்டிக்காரர்களும், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளும், மாணவிகளை கற்பழிக்கும் வாத்தியார்களும் என ஒரு எதிர்மறை எண்ணங்கள் மாத்திரமல்ல, மிகையாகத் திரிக்கப்பட்ட வக்கிரமான பொய் பிம்பங்களைத்தான் திரைப்படங்கள் முன் வைக்கின்றன

இப்படி ஒரு பொய்யை கதையாக வாசிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறதென்றால் அதற்கு திரை வடிவம் கொடுத்து தைரியமாக மக்கள் முன்னே படைக்கிறார்கள் என்றால், எவ்வளவு வக்கிரம் நிறைந்த ஒரு சிலரின் கைகளில் திரையுலகம் என்னும் ஒரு மாபெரும் மக்கள் தொடர்பு ஊடகம் சிக்கித் தவிக்கிறதென்று நினைத்துப் பார்க்கவே பயமாய் உள்ளது.

இந்தக் கதாசிரியர்களுக்கும், இயக்குனர்களுக்கும், ஊடக வர்ணிப்பாளர்களுக்கும் ஒரு சில கேள்விகள்:

1. கிராமங்களைப்பற்றிய உங்களது படத்திற்கான மூலக்கருத்து எங்கிருந்து கிடைத்தது? நான் தான் படைத்தேன், உருவாக்கினேன் என்றல்லாம் பினாத்தாதீர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு ஒரு பொருளையோ அல்லது கருத்தையோ மாற்றும் வித்தைதான் மனிதனிடத்தில் உள்ளதே தவிர, உருவாக்கும் திறமை யாரிடத்திலும் இல்லை.

2. நீங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கெல்லாம் ஒரு மேற்கோள் காட்டுகிறீர்களே "தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் வெல்லும்" என்று, இந்த தர்மம் எப்படி வெல்கிறது என்று நீங்கள் முன்வைக்கும் மாதிரிகளில் எவ்வளவு வன்ம மற்றும் வக்கிர உணர்வுகளை பொய்யாய் புனைகிறீர்கள் என எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பருத்தி வீரனாகட்டும், சுப்பிரமணியபுர வாசிகளாகட்டும், அரிவாள் இல்லாமல் வசனமே பேச மாட்டார்களா?

3. கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் இவர்களிடம் சாராயம் குடிப்பது, சண்டை போடுவது, பெண்ணின் பின்னால் சுற்றுவது, அரிவாள் எடுத்து அடுத்தவனை ரத்தம் பீய்ச்ச வெட்டுவது அல்லது வெட்டுப்படுவது போன்ற குணங்களைத்தவிர வேறு குணங்களையே உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லையா?

4. கிராமத்து இளைய சமுதாயத்திடம் எழுந்து நிற்கும் அறிவுக் கூர்மையும் மதி நுட்பமும், இன்றைய நகர்ப் புற சமுதாயத்திற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற உண்மை உங்களுக்கு புலப்படாமல் போனது ஏன்? இன்று மென்பொருள் துறையிலாகட்டும், கட்டுமானத்துறையிலாகட்டும், இன்னும் எந்தத் துறையை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அந்தத் துறையிலும் கோலோச்சி நிற்கும் பெரும்பான்மை கிராம இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் எல்லாம் உங்கள் கண்களில் படுவதேயில்லையா?

5. சிறுதொழில் செய்து முன்னேறுபவர்கள், சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடுபவர்கள், படிப்பில் முதன்மை வகிப்பவர்கள், சேவை மனப்பான்மையோடு பணிபுரியும் ஆசிரியர்கள், மாலை வேளையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அதற்கென காத்திருந்து, மாணவர்களுக்கு கால்பந்து கற்றுத்தந்து, அவர்களோடு கால்பந்து விளையாடும் காவல்துறையினர், மாணவிகளுக்கு தையல் கற்றுத்தந்து ஊக்குவிக்கும் ஆசிரியைகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என வகை வகையாக அடுக்கிக் கொண்டே போகலாமே, இவர்கள் யாருமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா? அல்லது உங்கள் கற்பனை உலகத்தின் எல்லைக்கு அப்பால் இருக்கிறார்களா?

6. இன்னும் இந்திய கிராமங்களை ஒரு சாபத்தின் குறியீடாகவே ஏன் பார்க்கிறீர்கள்? அல்லது ஒரு அருவருப்புகளின் நிகழ்விடங்களாகவே ஏன் சித்தரிக்கிரீர்கள்?

7. கிராமத்து திருவிழாக்களில் கூட உங்களுக்கு இன்னும் ஆடப்படும் காவடி ஆட்டத்தின் நளினமோ, ஒயிலாட்டம், மயிலாட்டத்தின் அசைவுகளோ தெரிவதில்லை. தப்பட்டை அடித்து ஒரு கருத்தினை மையமாக வைத்து மணிக்கணக்காக சுருதி மாறாமல் அடித்து ஆடி, இது வரை கண்டிராத மற்றும் கேட்டிராத சேதி சொல்லும் அந்த நாட்டிய நாடகங்கள் உங்கள் கண்களில் படாமல் போனதேன்? மாறாக கரகாட்டக்காரிக்கும் குட்டைப் பாவடை அணிவித்து, அவளது ரவிக்கையின் அளவை சுருக்கி, மார்பின் பிளவுகள் மற்றும் அளவுகளை வெளிக்காட்டவும், இடுப்பு மடிப்புகளில் இருந்து, தொடையின் நிறம் தெரியும் வரை காமிரா கோணங்கள் அமைக்கவும் பெரும் பாடு பட்டு கலைச்சேவை செய்கிறீர்களே, இது வக்கிரத்தின் வெளிப்பாடில்லாமல் வேறென்ன?

8. கிராமத்தில் ஒழுக்கம் நிறைந்த பண்ணையார்களே இல்லையா? பண்ணையார் என்று இருந்தால் அவர் வைப்பாட்டி வைத்திருப்பவராகத்தான் இருக்க வேண்டுமா?

9. கிராமங்களில் நிகழும் அனுதின நிகழ்வுகளைத்தான் நாங்கள் படம் பிடித்துக் காட்டுகிறோம் என்றும், கிராமத்திற்கென்றே உரிய பிரச்ச்னைகளைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம் என்றும் தயவு செய்து பாசாங்கு பதில்களை சொல்லாதீர்கள். கிராமத்துப் பிரச்சனைகளின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள் எத்தனை முறை பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி பிரச்சனைகளை, அந்த பிரச்சனைகளுக்கே உள்ள வீரியத்தோடும், ஆழத்தோடும் பிரதிபலித்திருப்பீர்கள்? என் இனிய தமிழ் மக்களே என்று பாசம் பொழிபவர்கள் கூட சப்பாணியையும் பரட்டையையும் ஒரு பெண்ணின் பின்னே அலைபவர்களாகக் காட்டித்தான் கைதட்டல் வாங்குகிறார்கள். ஒரு பெண்ணுக்கான சண்டையையும், மண்ணுக்கான சண்டையையும், திமிர் பிடித்த பண்ணையாரை எதிர் கொள்ளும் கூலிக்கார கதாநாயகனையும் தவிர, உங்கள் கேமராக்கள் வேறு கோணங்களில் பயணிக்க மறுப்பதேன்?

10. கிராமத்து வாலிபப் பெண்களை நீங்கள் பார்க்கும் பார்வை என்றுதான் மாறுமோ தெரியவில்லை. ஊர்த்திருவிழாவில் மாமன் வாங்கித்தரும் சடைக் குஞ்சத்துக்கும், ரப்பர் வளையலுக்கும், கலர் ரிப்பனுக்கும் மயங்கி மாமனுக்கு முத்தம் கொடுத்து, எப்ப மூணு முடிச்சு போடுவே மாமா என ஏங்கிக் கிடந்த காலங்கள் மலையேறிப் போனது. இன்று விடுமுறை நாட்களில் காட்டில் களை எடுத்து விட்டு, மாலையில் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறார்கள் பெண்கள். அப்பனும் ஆத்தாளும் காட்டிய பையனுக்கு கழுத்தை நீட்டிய காலம் போய், வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுய அறிவுள்ளவர்களாக மாத்திரமல்ல, சுதந்திரம் உள்ளவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனைகள் எங்கள் கிராமத்து இளம் பெண்களிடம் வெகுவாக இருக்கிறது. வீட்டுக்காரர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த பச்சைக்கலர் பட்டுப்புடவை, அண்ணன் காட்டில் நெல் விளைந்து அமோக அறுவடை ஆனதும் தங்கச்சிமேல் பாசம் மாறாமல், குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கப்போனபொழுது ஆசையாய் ஒரு பவுன் சங்கிலி குடுத்தானே அந்தச் சங்கிலி என்ற மனதை நெகிழ வைக்கிற பழைய கால சமாச்சாரங்கள் இன்னும் எங்கள் பெண்களிடையே உண்டு. ஆனால் அதே சமயத்தில் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் எத்தனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தெளிவான சிந்தனையும் உண்டு. பெற்ற மக்களை எப்படி வளர்ப்பது, என்னவாய் உருவாக்குவது போன்ற எதிர்கால திட்டங்களில் எங்கள் கிராமத்துப் பெண்கள் வெகுவாக முன்னேறியிருக்கிறார்கள். பணத்தைக் கையாள்வதிலும், எதிர்காலத்திற்கான சேமிப்பிலும், குடும்ப நிர்வாகத்திலும், சமூக மேம்பாட்டிலும் என சொல்ல எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது, அத்தனை துறையிலும் எங்கள் கிராமத்துப் பெண்கள் முன்மாதிரியாய் நிற்கிறார்கள்.

ஏன் இந்த முன்னேற்றங்களோ, நல்ல விஷயங்களோ உங்கள் கண்களில் படுவதில்லை ????????


மாறாக நீங்கள் கிராமத்துப் பெண்களாகக் காட்டுபவர்களில் ஒருத்தி (பருத்தி வீரன் நாயகி) சொல்லுகிறாள் " என் உடம்பை அம்மணமா காட்டறதுண்ணா அது உனக்குத்தான்னு அந்த சாமிகிட்டயே சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேண்டா" " எனக்கு கல்யாணம் பண்ணிவெச்சா வேற எவங்கூடயாவது படுத்து புள்ளை பெத்துக்குவன்னு மாத்திரம் நினைக்காதீங்க", மற்றும் காதலுக்கு சோதனை வந்த நேரத்தில் " ஏண்டா, நீ பேசாம எங்கூட படுத்து எனக்கு ஒரு புள்ளைய குடுத்துரேண்டா"!!!!!!!!!!! கேட்பதற்கு காது கூசும், அல்லது ஒழுக்கம் கெட்டு, காசுக்கு உடலை விற்கும் ஒரு விலை மாது கூட பேச வெட்கப்படும் வார்த்தைகளை ஒரு கிராமத்துப் வாலிபப் பெண் சர்வ சாதரணமாய் பேசுவது போல யோசிக்க உங்களால் எப்படி ஐயா முடிகிறது?

எந்நேரமும் (சுப்பிரமணிய புரத்தில்) தன் வீட்டின் முன் அமர்ந்து சிகரட் குடித்துக் கொண்டும், அடுத்தவனை ஏமாற்றி சாராயம் குடித்துக் கொண்டும், வயதான விதவைத்தாயின் உழைப்பில் சோறு சாப்பிட்டு, ஊருக்குள் சண்டையிட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு இளைஞனை பார்த்து எந்தப்பெண்ணுக்காவது காதல் பொத்துக் கொண்டு வந்து, அந்த இளைஞனுக்காய் அந்தப் பெண் ஏங்கவும் அழுகவும் செய்கிறாள் என்றால் நிச்சயமாய் அந்தப் பெண்ணின் மன நிலையை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், இன்றைய இந்திய கிராமத்துப் பெண்கள், நான் முன்பே கூறியது போல வாழ்கைத்துணையை தேடுவதிலும், தெரிந்தெடுப்பதிலும் வெகு ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள்.

எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும், எத்தனை நவீனத்துவம் கிராமத்து வாழ்க்கையை ஆட்கொள்ள முயற்ச்சித்தாலும், எங்கள் இந்திய கிராமம் என்பது என்றுமே நீங்கள் வர்ணித்தது போல் பருத்தி வீரன்களாலும், சுப்பிரமணியபுர அரிவாள் மற்றும் அரசியல் கோஷ்டிகளாலும் சூழப்பட்டதில்லை. எங்கள் பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளை பேசி காதலர்களுடன் கொஞ்சி மகிழ்ந்ததில்லை. தத்ரூபம் என்ற பெயரில் அபத்தங்களையோ, வக்கிரங்களையோ, அப்பட்டமான பொய்களையோ சொல்லி, கிராமம் என்றால் இப்படித்தான் என்ற ஒரு பிழையான பிம்பத்தை நிகழ்கால சந்ததிக்கு தருவதோடு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததிக்கும் வைத்துப் போகாதீர்கள்.

நீங்கள் தத்ரூபம் என கற்பனை செய்து, உங்கள் வக்கிர எண்ணங்களுக்கெல்லாம் கிராமத்து எதார்த்தம் என்ற பொய்யான வண்ணம் பூச நினைப்பதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரே ஒரு கேள்வி தான் மனதில் எழுகிறது.

உண்மையாலுமே உண்மை இதுதானா ?

2 comments:

கூட்ஸ் வண்டி said...

ஆகா... என்ன..! ஒரு வீச்சு.

உங்க எழுத்தை தான் சொன்னேன்.

நிறைய எழுதுங்கள், வரவேற்கிறேன்...உங்க கருத்துகளையும், எழுத்துக்களையும்.

R. பெஞ்சமின் பொன்னையா said...

வருகைக்கு நன்றி கூட்ஸ்.