Tuesday, November 18, 2008

இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம் !!!

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" #1.

இயேசு கிறிஸ்துஇயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் முக்கியமானதாக கருதப்படும் கட்டளை இது. தன்னைத்தானே கிறிஸ்தவம் என்னும் மதத்தில் இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும், தன் வாழ் நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த கட்டளையை குறித்து சிறிதளவேனும் கண்டிப்பாக சிந்தித்திருப்பான். இனி இந்த கட்டளை கொடுக்கப்பட்ட கால கட்டத்தையும், யாருக்காக கொடுக்கப்பட்டது என்பதையும் சற்றே பார்ப்போம்.இந்தக் கட்டளை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்த்துவின் சீஷனாகும் தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரமே இந்த கட்டளை கொடுக்கப்பட்டது. தகுதிகள் என்னென்ன :

அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி " ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன்" # 2


சீஷனாக இருக்கவிரும்புகிறவன் தனக்குண்டான யாவற்றையும் விட்டு, சுயநலம் துறந்து, பிறர் நலம் விழையும் ஒருவனாக மாறினால் மாத்திரமே அவன் இயேசுவின் சீஷனாக முடியும். அப்படிப்பட்ட சீஷன் மாத்திரமே மற்ற மனிதனுக்கு நல்வழி காட்ட முடியும்.


இனி சீஷர்கள் உருவான விதத்தைப் பார்ப்போம். கிறிஸ்து மண்ணில் வாழ்ந்த நாட்களிலும் சரி, அவரது நாட்களுக்குப் பிறகும் சரி, அவரால் போதிக்கப்பட்ட இறையியல் தத்துவம் என்பது வெகுவாக மக்களால் வரவேற்கப்பட்டது. வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமெனில் கிறிஸ்த்துவின் போதனைகளை ஏற்க மறுத்த யூத குலமே, பின்னாட்களில் அவரது போதனைகளில் பொதிந்து கிடக்கும் இறையியல் உண்மைகளையும், அன்பின் ஆழத்தையும் கண்டு வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். வெறும் எபிரேய மண்ணில் (இன்றைய மத்திய கிழக்கு நாடுகள்) மாத்திரமே வெகுவாக பிரசங்கிக்கப்பட்டு வந்த இந்த தத்துவம், ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்தவுடன் புது பரிமாணத்தைக் கண்டது. கான்ஸ்டன்டைன் என்னும் மன்னன் மாத்திரம் இந்த எளிய வாழ்வியல் நெறியால் கவரப்பட்டு, தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்திருப்பானெனில், இந்த தத்துவங்கள் வெறும் தத்துவங்களாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு மன்னன் தன் இறையியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பிறகு அதை மக்களிடத்தில் சொல்லாமலிருந்தால் அவன் மக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடுவான். இன்றைய நாட்களைப் போல் மதச் சாற்பற்ற நிலையிலெல்லாம் மன்னன் அந்த நாட்களில் இருந்து விட முடியாது. மன்னன் ஒரு முன் மாதிரியாய் வாழ வேண்டிய கட்டாயம் அந்த நாட்களில் இருந்தது. ஆகவே மன்னன் இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவிக்கப் போக, இந்த கிறிஸ்துவின் போதனை என்னும் ஒரு வாழ்வியல் தத்துவம், மதமாக பரிமாணமெடுத்து வேறு திசையில் பிரயாணிக்க ஆரம்பித்து விட்டது. மன்னன் அறிவிக்கும் வரை வாழ்வை நல்வழிப்படுத்தும் நெறிகள் நிறைந்த இப்போதனைகள், அரசனின் அறிவிப்புக்குப் பின் மதச்சாயம் பூசிக்கொண்டு மதம் பிடித்து அலைய ஆரம்பித்தது. இந்த வாழ்வியல் தத்துவங்கள் என்று மதம் எனும் மார்க்கத்தில் பயணம் செய்ய ஆரம்பித்ததோ அன்றே அதனுடன் பூசல் கொண்ட சடங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு சேர ஆரம்பித்தன. பாவ மன்னிப்பென்ற சடங்கு, பின்னர் ஞானஸ்நானம், புது நன்மை போன்ற சடங்குகள் நிறைந்து இது கத்தோலிக்க மதமாய் வலுவாய் கால்களை ஊன்ற அதிக நாட்கள் பிடிக்கவில்லை. அரசியல் ஆதரவும் கூட இருந்ததால், இந்த மத நம்பிக்கை மற்றவர்களின் இறைஉணர்வை வலுக்கட்டாயமாக ஆட்கொள்வதென்பது வெகு சுலபமாய் போய் விட்டது. மனிதனுக்குள் எப்பொழுதும் தானாகவே ஊற்றெடுத்துக்கிடக்கும் இறைத்தேடலுக்கு விடை தருவது போன்ற வெளித்தோற்றத்தை , காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட இந்த மத நம்பிக்கைகள் வெகுவாய் தர ஆரம்பித்தன.இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த இந்த கிறிஸ்த்தவ மதம், இந்தியாவிற்குள்ளும் வந்து சேர்ந்தது.


இது இந்தியாவிற்குள் வந்த கால கட்டத்தைக் குறித்த தெளிவான அறிவு எனக்கு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான "தோமா" முதலாம் நூற்றாண்டிலேயே வந்து கிறிஸ்துவின் போதனைகளை அறிவித்தார் என்றும், கேரள பிராமிணர்களின் முன் அற்புதங்கள் செய்து காட்டினார் என்றும், சென்னை பரங்கி மலையில் இருந்தார் என்றும் ஒரு சாரார் வரலாறு எழுத, இவை அனைத்தும் பொய் எனவும், தோமா பரங்கி மலைக்கு வரவேயில்லை, இவை அனைத்தும் கட்டுக்கதை என ஒரு சாரார் அதை மறுத்தும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். இதன் உண்மை நிலையை குறித்த ஆராய்ச்சி நமக்கு அவசியமில்லை. ஆனால் 18ம் நூற்றாண்டில் தமிழக கடற்கரையோர கிராமங்களில் அவ்வப்பொழுது, போர்ச்சுக்கீசிய வணிக கப்பல்கள் வந்து போவதும், அதில் பயணித்த பயணிகள் மூலமாகவும் இந்த கிறிஸ்த்தவ மதம் என்பது பரப்பப் பட்டது என்பதற்கு கடற்கரையோர இன்றைய கிறிஸ்த்தவ கிராமங்களே சாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் வெகு சீக்கிரமாக பரவிய வாழ்வியல் மாற்றம் பல மனிதர்களின் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதுமாக ஒரு கலந்த விழைவுகளை ஏற்படுத்தியது. பல மன்னராட்ச்சிகள் கவிழ்ந்தன, அரசுகள் தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டன, ஒரு புறம் முதலாளித்துவம் என்பது மேலோங்க ஆரம்பித்தாலும், அதற்கு எதிர்வினைகளாக புரட்சிகளும் வெடித்தன. நிம்மதி என்பது அரிதாகக் கிடைக்கும் ஒரு உணர்வாய் மாறிவிட்டதால் மக்களிடம் இறை நம்பிக்கை வளர ஆரம்பித்தவுடன், அந்த நம்பிக்கையை சரியாய் திசை திருப்பி தனக்கு ஆதாயம் தேடிக்கொள்வதில் "மதம்" ஒரு பெரிய வெற்றியை அடைந்தது. அதன் மூலம் மதப் பிரச்சாரம் என்பது மதத்தின் ஒரு நீங்கா அங்கமாகி இருந்ததது. அப்படி பிரச்சாரம் செய்ய வந்தவர் தான் "பர்த்தலமெயு சீகன்பால்க்" எனும் டென்மார்க் தேசத்துக்காரர்.

1709 - ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 -ம் தேதி இவர் வந்து தமிழகத்தின் தரங்கம்பாடியில் கரை இறங்கினார். வரலாற்றுப் பக்கங்களில் காணக் கிடைக்கும் முதல் கிறிஸ்த்தவ மதப்பிரச்சாரகர் இவர் தான். ஆனால் இவர் வந்த காலத்தில், இந்தியாவில் இருந்த இறை நம்பிக்கைகள் இவருக்கு ஒரு சவாலாக இருந்த பொழுதிலும், வருணாசிரம கொள்கை, மனுதர்ம கொள்கை இன்னும் என்னென்ன கண்ராவிக் கொள்கைகளோ, இந்தக் கொள்கைகளினால், சமுதாயத்தில் நச்சுப்போல் பரவியிருந்த சாதிக்கொடுமை, இவரது மதப்பிரச்சாரப் பணியை சுலபமாக்கியது. மனிதனுக்கு அன்றும் சரி, இன்றும் சரி, சமூக அந்தஸ்த்து என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது. அந்த அந்தஸ்து எதன் மூலமாய் கிடைக்கிறதோ, அதை சார்ந்தே அவன் வாழ்கிறான். தமிழகத்தில் மனிதனுக்கு அந்த நாட்களில் ( ஏன் இந்த நாட்களிலும் கூடத்தான்) காணப்பட்ட சாதிக்கொடுமைகளில் இருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நிற்க இந்த புதிய மதங்களின் வரவு மிகவும் வசதியாய் போய் விட்டது. ஆனால் இந்த மதப்பிரச்சாரகர்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இந்த இந்திய பூமியில் காத்திருந்தது. அதாவது, சமூகத்தில் நிலவி வந்த (வருகின்ற)சாதிக்கொடுமையினால் மனிதனுக்குள் ஏற்றத் தாழ்வுகள் அவனது பிறப்பிலேயே புகுத்தப்படுவது மாத்திரமல்ல, அவனது அடிப்படை உரிமைகள் கூட சாதியின் பெயரால் மறுக்கப்படுவது இன்றும் ஒரு அருவருப்பான நிகழ்வும், உண்மையும் தான். இந்த கசப்பான உண்மையை கண்டு ஆச்சர்யமும் வேதனையும் அடைந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் அடிப்படை உரிமைக்கான உத்திரவாதத்தை முதலில் தோற்றுவித்தனர். பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட்டன, மருத்துவ மனைகள் கட்டப்பட்டன. இவற்றுக்கெல்லாம் இறைவனின் பெயரால் வாரி வழங்க ஐரோப்பியர்கள் தயாராய் இருந்தனர். அப்படி நிறுவப்பட்ட அநேக ஸ்தாபனங்கள் தான் இன்று வாரி வழங்கும் அட்சய பாத்திரங்களாய் சிலருக்கு உபயோகப்படுகின்றன. இப்படி நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்ட சபைகளும், ஸ்தாபனங்களும் ஆரம்ப நாட்களில் என்னவோ ஒழுங்காய் செயல் பட்டது போல் தோன்றினாலும், பின்னாட்களில் சாதிக்கொடுமை என்னும் சமூக அவலம் சபைகளையும் விட்டு வைக்கவில்லை. #3

இப்படிப்பட்ட சபைகளில் இருந்து தோன்றிய ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அட்டூழியக்காரர்கள் மதத்தின் பெயரால் இன்றைய நாட்களில் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைப்பற்றித்தான் இந்த முழுப்பதிவும். இந்தியாவில் கிறிஸ்தவ மத தோற்றத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த சேவை உணர்வு அடியோடு ஒழிந்து போய், முதலீடில்லாமல் லாபம் ஈட்டும் ஒரு தொழிலாய் கிறிஸ்துவின் போதனைகள் திரிந்து இழிந்து நிற்கிறதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இந்தியர்களுக்குள் இருந்த இறைத்தேடல் வழிமுறைகளும், பரம்பொருளை குறித்த ஞானமும் உலகின் தலைசிறந்த கொள்கைகளாயும், ஞானமும் இருந்தவை. உருவில்லா ஜோதியை வழிபடும் வழிபாட்டு முறைகளை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆனால் இந்த வழிபாட்டு முறைகள் வெறும் சடங்கு சார்ந்தவைகள் மாத்திரமல்ல, உணர்வு சார்ந்தவைகளும் கூட. இந்தியர்களின் வாழ்வியல் நெறிகள், புழு பூச்சிக்கு கூட சிறிதும் தொல்லை தராதவைகள். முழுதும் சுய ஒழுக்கத்தை வலியுறுத்தும் போதனைகள் நிறைந்தவை. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் சுய ஒழுக்கம் வலுவாய் வலியுறுத்தி கூறப்பட்டாலும், பிறர் நலன் பேணுதல் என்பது முன்னிறுத்தப்பட்டது. இந்த பிறர் நலம் பேணும் பண்பு இந்தியாவில் கிறிஸ்தவ பிரச்சாரங்களில் எதிரொலித்தது மாத்திரமல்ல, செயல் வடிவத்திலும் வெகுவாய் காணப்பட்டது. அதன் விழைவுகள் தான் இந்த கல்விக் கூடங்களும், மருத்துவ சேவைகளும் மற்றும் பல சேவைகளுமாய் இருந்தது. ஆனால் வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரிய நிகழ்கால உண்மை என்பது இந்த பிறர் நலம் பேணல் முற்றிலுமாய் சுய நலம் பேணலாய் மாறி விட்டது. கல்விக்கூடங்கள் பணம் காய்க்கும் மரங்களாக மாற்றப்பட்டன. சபைகள் பணம் சேர்க்கும் கேந்திரங்களாக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவுக்கு நிறைய வேலைகள் கட்டளையிடப்பட்டன, இயேசு அழைக்கிறாரில் ஆரம்பித்தது, இப்பொழுது, விடுவிக்கிறார், குணமாக்குகிறார், சுகமாக்குகிறார், மனம்மாற்றுகிறார், துயர் துடைக்கிறார், அன்பு செலுத்துகிறார், பார்க்கிறார், கேட்கிறார், மன்னிக்கிறார், தூக்கி விடுகிறார் என்று இன்னும் இயேசு கிறிஸ்த்துவை என்னென்னமெல்லாமோ செய்யவைத்தார்கள், வைக்கிறார்கள். சென்ற முறை நான் பிறந்த மண்ணான கொங்கு நாட்டிற்கு சென்ற பொழுது ஒரு விளம்பர பலகை பார்த்தேன். "இயேசுவின் கண்ணீர் ஊழியங்கள்". அடப்படுபாவிகளா!! இயேசுகிறிஸ்து எப்பொழுதிருந்து அழுக ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. மக்களும் ஆட்டு மந்தைகளாய் சென்று இப்படியெல்லாம் செய்யும் இயேசுவை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி கவர்ச்சிகரமான ஊழியங்களினால் சமூகத்தில் மூன்று வகையான விழைவுகளை காண முடிகிறது.


ஒன்று : கிறிஸ்துவின் சீஷத்துவ குணம் சிறிதும் இல்லாத இந்த ஊழியக்காரர்களால் கிறிஸ்துவின் போதனைகள் முற்றிலும் மாற்றப்பட்டு கவர்ச்சிகரமான கருத்துகள் புகுத்தப்பட்டதால், உண்மைப் போதனைகளின் தொன்ம வடிவம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது. மக்களின் தேவைக்கேற்ப சுவிஷேஷம் வழங்க இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள்.இதன்மூலம் கிறிஸ்தவ போதனைகள் புறம் தள்ளப்பட்டு, கிறிஸ்துவின் பெயரால், எந்த இறை நம்பிக்கைக்கும் ஒவ்வாத அருவருக்கத்தக்க போதனைகளால் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.


இரண்டு : எங்கு திரளான மக்கள் கூடுகிறார்களோ, அங்கு பணப்புழக்கம் அதிகரிக்கப்படுகிறது. கணக்கில் சேராத பணம் திரண்டு வருவதால், பிரச்சனைகள் அதிகமாகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள்.
இவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள். பணப்பிரச்சினையில் சிக்கியிருக்கும் இவர்களால் எப்படி மற்றவர்களுக்கு "பண ஆசையை ஒழித்து விடுங்கள்" என்று போதிக்க முடியும். இவர்கள் என்ன தெருவில் அமர்ந்து யாகம் செய்யவா அமர்ந்திருக்கிறார்கள்????? வெட்ககேடாய் இருக்கிறது. இவர்களா இறைஞானம் போதிக்கப்போகிறார்கள்? இவர்களைப் பார்த்துத்தான் இயேசு கிறிஸ்து சொன்னாரோ " குருடன் குருடனுக்கு எப்படி வழி காட்ட முடியும்?"


மூன்று : இந்த துர்போதனைகளினால் நடைபெறும் மூளைச்சலவையில் ஒரு கூட்ட மக்கள், தங்களை அறியாமலே இதில் இழுக்கப்பட்டு, பின் இந்த சக்கர வியூகத்தில் இருந்து வெளி வர வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலையை காண முடிகிறது. கிறிஸ்தவர்கள் என்னும் முத்திரை இந்த கூட்டத்தாரின் மேல் குத்தப்படுவதால், நேற்றுவரை கலாச்சார செருக்குடன் வாழ்ந்துவந்த தங்களின் சமுதாயத்திலேயே இவர்கள் அந்நியமாகிப்போய் நிற்கிறார்கள். இப்படி அடையாளம் தொலைத்து செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த மந்தையைத் தான் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சுற்றிக் கொண்டிருக்கும் வன்முறை கும்பல்கள், மதம் மாற்றுகிறார்கள் என்ற பெயரில் சூறையாடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே மூளைச்சலவை செய்யும் கும்பல் எந்தப்பாதிப்பும் இல்லாமல் தங்கள் பணியை செவ்வனே செய்து வருகிறது. இதையெல்லாம் காணும் போது இறைவனிடத்தில் இப்படியாய் மன்றாடத் தோன்றுகிறது.

இயேசுவே இறங்கி வா சிலுவையிலிருந்து சீக்கிரம்!!
இந்த கெட்ட குமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
இவர்கள் உனக்கு சிலுவையில் கோவணம் கட்டிவிட்டு
தன்னுடலுக்கு பட்டாடை உடுத்துகிறார்கள்.
ஆணிகள் பாய்ந்த உன் கரத்தை காட்டி இவர்கள் உலகின்
ஆஸ்த்திகள் அனைத்தும் வாரிக்கொள்கிறார்கள்.
முள்முடி சூடிய உன் முகத்தைக் காட்டித்தான் இவர்கள் தன்
தலையை மூடும் கிரீடங்கள் சூடுகிறார்கள்.
உன்னைப் போல் பிறனை நேசி என்றாய், ஆனால் இவர்கள்
தன்னையும் உலகையும் மட்டுமே நேசிக்கிறார்கள்.
இறங்கி வா இயேசுவே சிலுவையிலிருந்து சீக்கிரம்!!!
இந்த கெட்டகுமாரர்களை கட்டி அணைத்துக் கொள்ள அல்ல
வெட்டி அழித்துக் கொல்ல வா!!
ஆதாரங்கள்:
#1 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 28, 19 மற்றும் 20 ம் வசனங்கள்.
#2 - இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள "பரிசுத்த வேதாமம்"மத்தேயு எழுதிய நற்செய்தி நூல், அதிகாரம் 16 , 24 ம் வசனம்.

5 comments:

jeevaflora said...

Really you are going with truth.Even from my childhood I never tide with the stupit identity.But now i have overcame it with lot of strugles.And the people from kerala and tamil nadu used to say orthodox cristians.I dont know wether the meaning or not.Any way very glad to meet you with a same ideas.
jeevaflora

R. பெஞ்சமின் பொன்னையா said...

Thanka jeevaa,

thanks for coming and posting your comment.

keep in touch

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in